திருமயம் அருகே ஒத்தபுளி குடியிருப்பு: அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

திருமயம்: அரிமளம் அருகே ஒத்தப்புளிகுடியிருப்பு அரசு பள்ளியில் போதுமான வகுப்பறைகள் கட்ட வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஒத்தப்புளிகுடியிருப்பில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ள்ளி அப்பகுதியில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாகும். இங்கு ஒத்தப்புளிகுடியிருப்பு, கீழப்பனையூர், தாஞ்சூர், கல்லுகுடியிருப்பு, பொந்துப்புளி, தெற்குகுடியிருப்பு, கீரணிப்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒத்தப்புளிகுடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி புதுக்கோட்டை-ஏம்பல் சாலையில் வயல்வெளியில் அமைந்துள்ளது. இங்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிடங்கள் போதுமானதாக இல்லாததால் அப்பகுதி மக்களில் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகளுக்கு முன்னர் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது அங்கு 15 வகுப்பறைகள் உள்ள நிலையில் 7 வகுப்பறைகள் மட்டுமே தற்போது மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுவதால் சேதமடைந்த கட்டிடங்களில் வைக்காமல் மரத்தடியில் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும் போதுமான கட்டிடங்கள் இல்லாததால் ஒரே வகுப்பறையில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் அமர வைக்க வேண்டி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்க இடையூறு ஏற்படுகிறது. அதே சமயம் பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் அருகிலுள்ள வயல் பகுதி, புதர் செடிகளுக்குள் இருந்து விஷ பூச்சிகள் இரவு நேரங்களில் வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் காலை நேரங்களில் வகுப்பறைக்கு செல்ல அஞ்சுவதோடு ஆசிரியர்கள் மாணவர்களை பாதுகாப்பதில் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஒத்தப்புளிகுடிருப்பு அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: