பருவநிலை மாற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்து போராட வேண்டும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலக நாடுகள் தனித்தனியாக இல்லாமல், ஒருங்கிணைந்து, முழுமையாக போராட வேண்டும்’,’ என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். சவுதி அரேபியாவில் 15வது ஜி20 மாநாடு நடக்கிறது. இதன் 2ம் நாளான நேற்று, ‘பூமியை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் உலக தலைவர்கள் உரையாற்றினார். இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று பேசியதாவது: சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் எங்களின் பாரம்பரிய நெறிமுறைகளுடன், இந்தியா குறைவான கார்பன் வெளியேற்றம் செய்யவும், பருவநிலை மேம்பாட்டு நடைமுறைகளை பின்பற்றவும் உறுதிபூண்டுள்ளது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்த இலக்குகளை மட்டுமின்றி, அதையும் தாண்டிய நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக பல்வேறு துறைகளில் நாங்கள் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எல்இடி விளக்குகள் பயன்பாட்டை அதிகரித்து வருடத்திற்கு 3.8 கோடி டன் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுத்துள்ளோம். 8 கோடி வீடுகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கி புகையில்லா சமையலறைகளை உருவாக்கி உள்ளோம்.    பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலக நாடுகள் தனித்தனியாக அல்லாமல், ஒருங்கிணைந்து முழுமையாக விரிவாக போராட வேண்டும்.

வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி உதவிக்கும் அதிக ஆதரவை தந்தால், ஒட்டுமொத்த உலகமும் வேகமான வளர்ச்சியை காணும். மனித நேயம் வளர, ஒவ்வொரு தனி மனிதனும் செழிப்படைய வேண்டும். தொழிலாளர்களை உற்பத்தி காரணியாக மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு தொழிலாளரையும் மனித கண்ணியத்துடன் அணுக வேண்டும். அத்தகைய அணுகுமுறை பூமியை பாதுகாப்பதற்கான சிறந்த உத்தரவாதமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

₹5,555 கோடியில் 3 குடிநீர் திட்டம்

உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புறங்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக ₹5,555 கோடி மதிப்புள்ள 3 திட்டங்களுக்கு, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களின் மூலம், 2,995 கிராமங்களில் உள்ள வீடுகள் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் வசதி பெறும். இதன் மூலமாக, 2 மாவட்டங்களில் உள்ள 42 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், இந்த திட்டத்தை 24 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: