ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி.20 போட்டிகளில் இருந்து விலகியது ஏன்?..ரோகித்சர்மா பேட்டி

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரின் ஆடியபோது இடது பின்தொடை தசைநாரில் கிழிவு ஏற்பட்டது. இதனால் சில ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆடும் அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவரது காயம் பெரிய அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடற்தகுதியை நிரூபிக்க ரோகித்சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். அங்கு உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், எனது காயம் தொடர்பாக மக்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது பற்றி உண்மையிலேயே தெரியாது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம், காயம் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தேன்.

காயத்தில் இருந்து மீண்டு இன்னும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தசைநாரை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை செய்து வருகிறேன். நீண்ட வடிவிலான (டெஸ்ட்) போட்டிகளில் ஆடுவதற்கு முன்பாக தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதன் காரணமாகவே இப்போது பெங்களூரு அகாடமியில் இருக்கிறேன். தொடை தசைநார் பிரச்சினையை முழுமையாக சரி செய்ய இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டி உள்ளது. அதனால் தான் ஒரு நாள், டி.20 போட்டிகளில் இருந்து விலகி உள்ளேன். டெஸ்ட் தொடருக்கு முன் இருக்கும் 25 நாட்கள் இடைவெளியில் உடல்தகுதியை மேம்படுத்திக்கொண்டால், அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்கலின்றி விளையாடலாம் என்று நினைத்தேன். அதனால் குறுகிய வடிவிலான போட்டியில் விளையாடவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். மற்றவர்கள் ஏன் இதை பற்றி குழம்பிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories: