மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவிகிதம் நிதிப் பங்கீடு அளிக்க வேண்டும்; அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக நலன் கருதி 3 கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார். தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்த விழாவின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது, தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்த திட்டங்கள் மற்றும் நிதிகள் ஆகியவை உதவிகள் அல்ல என்றும் அவை மாநில உரிமைகள் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து விழா நிறைவு பெற்ற பின்னர் அமித்ஷா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், தமிழக நலன்களுக்காக 3 கோரிக்கை மனுக்களை அமித் ஷாவிடம் வழங்கியுள்ளார் முதல்வர் பழனிசாமி. கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு, காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்பு, நடந்தாய்வாழி காவிரித் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவிகிதம் நிதிப் பங்கீடு அளிக்க வேண்டும் என்றும் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: