நாட்டை பிளவுபடுத்த லவ்ஜிகாத் வார்த்தையை உருவாக்கியதே பாஜ தான்: ராஜஸ்தான் முதல்வர் கண்டனம்

ஜெய்ப்பூர்: லவ்ஜிகாத்தை தடுக்க உத்தரப்பிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய பாஜ ஆளும் மாநில அரசுகள் முடிவு செய்திருக்கும் நிலையில், ‘நாட்டை பிளவுபடுத்த லவ்ஜிகாத் என்ற வார்த்தையை உருவாக்கியதே பாஜ தான்’ என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜ ஆளும் உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் லவ்ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அம்மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘திருமணம் என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. அதனை தடுக்க சட்டம் இயற்றுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எந்த நீதிமன்றமும் அதை ஏற்காது. காதலில் ஜிகாத்துக்கு இடமில்லை. லவ் ஜிகாத் என்பது நாட்டை பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் பாஜ உருவாக்கிய வார்த்தை’’ என கூறி உள்ளார்.

Related Stories: