பாலக்கோடு அருகே மீட்கப்பட்ட கிணறு அருகே மீண்டும் வந்த பெண் யானை: காட்டுப் பகுதிக்கு விரட்டினர்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏழுகுண்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலத்தின் தோட்டத்தில் உள்ள கிணற்றில், நேற்று முன்தினம் அதிகாலை பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, 15 மணி நேர போராட்டத்திற்கு பின் யானையை உயிருடன் மீட்டனர். பின்னர், யானைக்கு மயக்கம் தெளிவதற்காக ஸ்பிரே அடித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்து, நள்ளிரவு 1 மணி அளவில் எழுந்த யானை, மெதுவாக தேன்கனிக்கோட்டை காப்புக் காட்டிற்குள் சென்றது. இருப்பினும் 10 பேர் கொண்ட வனத்துறை குழுவினர், அப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர்.

இதனிடையே காப்பு காட்டிற்குள் சென்ற யானை, நேற்று காலை கிணற்றில் விழுந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே வந்து, சுற்றித் திரிந்தது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் யானையை காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று மாலை, ஒரு வழியாக யானையை காப்புக்காடுக்குள் விரட்டினர்.

Related Stories: