மருத்துவ படிப்பை பாதியில் கைவிடுகின்றனர் ஏழை மாணவர்கள் கல்வி கட்டணத்தை அரசு மற்றும் பிரபலங்கள் ஏற்கவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேண்டுகோள்

மதுரை:  திமுகவை சேர்ந்த நெல்லை மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிரஹாம்பெல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டைப்போலவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகளுக்கான கட்டணத்தை பலரால் செலுத்த முடியாத நிலை உள்ளது. கட்டணம் செலுத்த முடியாமல் சிலர் மருத்துவ படிப்பை கைவிடும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே, தனியார் மருத்துவக்கல்லூரிகளின் தற்போதைய கல்வி கட்டணத்தை ரத்து செய்தும், குறைவாகவும் நிர்ணயம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த ஒரு அரசுப்பள்ளி மாணவரின் கல்வி கட்டணத்தை ஒரு மூத்த வக்கீல் ஏற்றுள்ளார். பல சிரமங்களுக்கு பிறகே அரசுப்பள்ளியில் பயின்றவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனாலும், கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிடும் நிலை ஏற்படுவது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. எனவே, ஏழை மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்க அரசு மற்றும் பிரபலங்களும், மூத்த வக்கீல்களும் ஒவ்வொரு மாணவரை தத்தெடுத்து கட்டணத்தை செலுத்த வேண்டும்’’ என்றனர். பின்னர், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு தலைவர், சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர் மற்றும் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: