அரசு விழா, கட்சியினருடன் ஆலோசனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிப்பு: விமானம் நிலையம் முதல் நட்சத்திர ஓட்டல் வரை தீவிர கண்காணிப்பு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, 10.50 மணிக்கு விமானநிலையம் வருகிறார். 10.55 மணிக்கு புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் சாலை மார்க்கமாக எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு 1.55 மணிக்கு செல்கிறார். பின்னர் மாலை 4.15 மணிக்கு நட்சத்திர ஓட்டலில் இருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு 6.05 மணிக்கு கலைவாணர் அரங்கில் இருந்து புறப்பட்டுஅவர் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இரவு 7 மணிக்கு பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 8.30 மணி அளவில் உயர்மட்டகுழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், மறுநாள் காலை 10 மணிக்கு நட்சத்திர ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சென்னை வந்து செல்லும் வரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமானநிலையம் முதல் அமித்ஷா தங்கும் நட்சத்திர ஓட்டல் வரை 10 மீட்டருக்கு ஒரு காவலர் வீதம் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கிலும் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமித்ஷா செல்லும் நேரத்தில் மட்டும் விமான நிலையம் முதல் எம்.ஆர்.சி.நகர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 3 துணை கமிஷனர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

Related Stories: