ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்: நாளுக்கு நாள் சுறுங்கும் அவலம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமங்கலம் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், நாளுக்கு நாள் குளம் சுறுங்கி கொண்டே செல்கிறது.ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சியில், சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் அருகில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின் புறம் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சுங்குவார்சத்திரம் பகுதி மக்கள், குடிநீர் வசதிக்காக செல்வவிநாயகர் கோயில் குளத்தை பயன்படுத்தினர். நாளடைவில் இந்த குளத்தை சுற்றி 30 க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி வசிக்கின்றனர்.மேலும் குளத்தின் கரை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து 60க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. குளத்தை சுற்றி கால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலக்கப்படுகிறது. அதேபோல், அப்பகுதியில் உள்ள ஓட்டல் குப்பை, கழிவுகளை கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால் இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக பாழடைந்து காணப்படுகிறது.

குறிப்பாக, இதில் கழிவுநீர் கலப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகும், தொழிற்சாலையாகவே உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த குளத்தை சீரமைத்து தரவேண்டும். அங்குள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சுங்குவார்சத்திரம் பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் உள்பட பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு குளம் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய் துறையினர், டிசம்பர் மாதம், குளத்தை அளவீடு செய்தனர். பின்னர், ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் குறித்து அறிக்கை தயாரித்து, கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. இதனால் நாளுக்கு நாள் இந்த குளம் மாசடைந்து வருவதுடன், ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பெரும் விபத்து அபாயம்

தற்போது பருவ மழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. சில இடங்களில் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. அதுபோல், செல்வவிநாயகர் கோயில் குளத்தில் தண்ணீர் நிரம்பி, ஆக்கிரமிப்பு வீடுகள் சேதமடையும் நிலையும் உள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories: