நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு பசுமை வரி அதிகரிப்பு

* பஸ், லாரிகளுக்கு மூன்று மடங்கு உயர்வு

* டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

ஊட்டி: வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு பசுமை வரி (கட்டணம்) உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.  இது தவிர வெளியூர்களில் இருந்து உணவு பொருட்கள், கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான சரக்கு லாரிகள் மற்றும் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன.

வெளியூர்களில் இருந்து வரும் லாரிகள், இதர வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பசுமை வரியை நீலகிரி மாவட்ட நிர்வாகம் வசூலித்து வருகிறது. அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரியாக 30 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், வாகனங்களுக்கு ஏற்றவாறு தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளது.  இரு சக்கர வாகனங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

 இது பற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:  நீலகிரி மாவட்டத்தில் கல்லாறு மற்றும் கக்கநல்லா சோதனைச்சாவடிகளில் நுழையும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பஸ்களுக்கு 100ம், டிப்பர் லாரிகளுக்கு 100ம், மேக்சி கேப்களுக்கு 70ம், சுற்றுலா வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு 70ம், கார் மற்றும் ஜீப்களுக்கு ₹30ம், 3 சக்கர வாகனங்களுக்கு 15ம், இரு சக்கர வாகனங்களுக்கு 10ம் என பசுமை வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: