குழப்பிட்டாய்யா சீனாக்காரன்...!: புதிய ஆய்வில் அதிர்ச்சி

பீஜிங்: முட்டையை அதிக அளவில் உட்கொள்வது முன்கூட்டிய நீரிழிவு நோய்க்காக அபாயத்தை 60 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முட்டைகள் மனிதர்களின் மிகச் சிறந்த நண்பராக கருதப்படுகிறது. பரபரப்பான நேரத்தில் அல்லது மிகவும் சோம்பலான நேரத்தில் சுலபமாக பசியாற கைகொடுப்பது முட்டை. சமையல் பயன்பாடு மட்டுமின்றி, அதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது அதன் பிரபலத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏராளமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு போன்றவற்றை முட்டை கொண்டுள்ளது. மேலும், பல ஆரோக்கியத்துக்கு சாதகமான அம்சங்களும் உள்ளது.கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், தினமும் ஒன்று அல்லது 2 முட்டைகள் சாப்பிட்டால், அதில் உள்ள புரதச்சத்து காரணமாக கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனால், முட்டை சாப்பிடாதவர்கள் கூட, இப்போது அதை சாப்பிடும் நிலைக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், அதிக முட்டைகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் என, புதிய ஆராய்ச்சி முடிவு வெளியாகி இருக்கிறது. சீனா மருத்துவ பல்கலைக் கழகமும், கதார் பல்கலைக் கழகமும் இணைந்து, முட்டை குறித்த ஆய்வை நடத்தியுள்ளன. இந்த ஆய்வில், ‘ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கான அபாயத்தை 60 சதவீதம் அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் என்பது உலகத்தில் உள்ள மக்களிடையே மிக முக்கிய கவலை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படி, உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் இந்த வாழ்க்கை முறை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த பத்தாண்டுகளில் இருமடங்காக இந்நோய் அதிகரித்துள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு சரியான மருந்து அவசியமாகும். எனினும், இந்த நோயின் அபாயத்தை குறைப்பதில் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கின்றன,’ என கூறப்பட்டுள்ளது. முட்டை சாப்பிட்டால் கொரோனா தாக்காது என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் இருந்து வெளியாகி உள்ள இந்த ஆய்வு முடிவு, மக்களை குழப்பி இருக்கிறது.

Related Stories: