திருப்பதியில் நாக சதுர்த்தியை முன்னிட்டு மாடவீதியில் 8 மாதத்துக்கு பின் வலம் வந்த மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயாருடன் மாட வீதிகளில் 8 மாதங்களுக்கு பின் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நேற்று நடந்தது. ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும், மகாவிஷ்ணுவுக்கு படுக்கையாகவும் சேவை செய்து வருகிறார் ஆதிசேஷன். எனவே தான் பிரமோற்சவத்தில் வீதி உலாவின் முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். இந்நிலையில், நாக சதுர்த்தியையொட்டி நேற்று  வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தேவி பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து உற்சவங்களும் ரத்து செய்யப்பட்டு சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் மட்டும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நாக சதுர்த்தியையொட்டி முதல்முறையாக ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கூடுதல் செயல்அலுவலர் தர்மா ரெட்டி, துணை அதிகாரி ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: