அமித்ஷா வருவதால் எந்த பயமும் இல்லை எந்த கொம்பனுக்கும் அதிமுக பயப்படாது: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

சென்னை: சென்னையில் சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது: பொது ஊழியர் என்பவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக, சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து  சேர்க்கப்பட்டால் குற்றம். பொது ஊழியரின் உறவினர்கள் அரசாங்கத்தின் எந்த ஏலத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை.  அரசு அறிவித்த பொது ஏலத்தில் கலந்து கொண்டு 28 லட்சத்துக்கு குவாரிக்கான ஏலத்தை எடுத்தார். அதில் விபத்து ஏற்பட்டது. ஒரு தொழிலில்  விபத்து ஏற்படும். விபத்துக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் காப்பீட்டு  திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் சொல்லி, விழுப்புரத்தில் கல்குவாரி விபத்தில் இறந்தவர் காப்பீட்டு திட்டத்தில்  சேர்க்கப்பட்டு இருக்கிறார். உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இதில் சட்டத்துக்கு புறம்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. நான் தவறு செய்து  இருந்தால் இப்போதே ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

அமித்ஷா வருகிற 21ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த வருகை ஆளுங்கட்சிக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று பாஜ மாநில தலைவர் எல்.முருகன்  சொல்லி இருக்கிறாரே?

அதிமுகவை பொறுத்தவரை என்றைக்கும் யாருக்கும் பயப்படும் நிலை வராது, வரவும் மாட்டோம். அப்படி எந்த கொம்பனுக்கும் அதிமுக பயப்படாது.அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை க்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டதா? எந்த உத்தரவு போட்டாலும், கவர்னர் உத்தரவு என்றுதான் வரும். இன்று, நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக இப்படிதான் இருக்கும். எந்த இடத்திலும்  ஆளுநரிடம் அனுமதி வாங்கிதான் செய்ய வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அந்த அரசாணையிலேயே, நாங்கள் சொல்லி இருக்கிறோம், எந்த  விதியின்படி இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொல்லியுள்ளோம். ஆளுநர் என்பது வேறு, வேந்தர் என்பது  வேறு. வேந்தர் என்பது மாநில அரசாங்கத்தால் ஒரு சட்டத்தின் மூலம் இயற்றப்பட்ட பொறுப்பை அவர் வகிக்கிறார். இதில் எந்த குழப்பமும் இல்லை.

Related Stories: