தேர்வு கட்டணத்திற்கு விலக்கு கோரிய சிபிஎஸ்இ மாணவர்கள் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கொரோனா காலத்தில் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என 11, 12ம் வகுப்பை சார்ந்த சிபிஎஸ்இ மாணவர்கள்  தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடிய நிலையில் உள்ளது. சில மாநிலங்களில் மட்டும் கல்வி  நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை மாநிலங்களில்  ஆன்லைன் மூலமாக தான் பாடம் எடுக்கப்படுகிறது. இந் நிலையில்,  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிபிஎஸ்இ நிர்வாகத்தில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  கடந்த வாரம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சிபிஎஸ்இ நிர்வாகம் சார்ந்த பள்ளியில் படிக்கும் எங்களுக்கு தற்போது கட்டணத்தை செலுத்தினால் தான் தேர்வுகளை எழுத முடியும் என  கட்டாயப் படுத்தப்படுகிறது.

இதில் கொரோனா பிரச்னையால் பொருளாதாரம் என்பது முடங்கியுள்ள நிலையில் அது எப்படி சாத்தியமாகும். அதனால் எங்களது எதிர்காலத்தை  அடிப்படையாகக் கொண்டு தேர்வு கட்டனத்தை செலுத்துவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.   இந்நிலையில், நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்  ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதத்தில்,” கட்டணத்தை செலுத்தினால் தான் மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்ற சிபிஎஸ்இ நிர்வாக தரப்பின்  கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பாதிப்படைந்துள்ளது மத்திய மாநில அரசு மட்டுமில்லை. மாணவர்களின் பெற்றோர்களும் தான்.  அதனால் தேர்வு கட்டணத்தை செலுத்துவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவில், ‘‘சிபிஎஸ்இயில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. இதில்  கட்டணம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இதில் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் ஆகியோர்  சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்தை அணுகி தான் கோரிக்கை வைத்து நிவாரணம் கேட்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தேர்வு கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற மாணவர்கள் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: