திருவண்ணாமலை கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் அமலுக்கு வந்தது: தினமும் 5ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் அமலுக்கு வந்தது. தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிப்படுகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் 10ம் நாளான 29ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2668அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவின் தொடக்கமாக எல்லை தெய்வ வழிப்பாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று மாலை துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபத்திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் வெள்ளித்தேரோட்டம், மகா தேரோட்டம் ஆகியவை இந்தாண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக கோயில் 5ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை நாளை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய இ-டிக்கெட் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஒரு நாளைக்கு 5ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்யும்போது தரிசனம் செய்யும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். மகா தீபம் ஏற்றப்படும் 29ம் தேதி கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: