திருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்: வரும் 21ம் தேதி நடக்கிறது

திருமலை: 15வது நூற்றாண்டு முதல் உலக நன்மைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் சிராவண (திருவோண நட்சத்திரம்) அன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் வேதாந்த ஜெகநாதச்சாரியலு 1980ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி முதல் மீண்டும் புஷ்பயாகம் நடத்த தொடங்கினார். பின்னர், கார்த்திகை மாதத்தில் சிராவண நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடத்தப்படுகிறது. அதன்படி, வருகின்ற 20ம் தேதி அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

21ம் தேதி காலை பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் புஷ்பயாகத்திற்கான பூக்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வர உள்ளனர். பின்னர், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வந்து ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்து, மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் ஆன 9 டன் மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்படும். பிறகு சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: