தீபாவளிக்காக வெளியூர் சென்று திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்..!!

கோவை: தீபாவளி பண்டிகை காலங்களில் வெளியூர் சென்று திரும்பி வந்தவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு  கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் சற்று குறைவாக இருக்கிறது. கடந்த மாதங்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 150 பேர் வரை மட்டுமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதுஒருபுறம் இருக்க தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்காத வண்ணம் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக பல்வேறு காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்று திரும்பியவர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அந்தந்த பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, வீட்டில் இருப்பவர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொள்ள ஆணையர் வலியுறுத்தியுள்ளார். எனவே மக்கள் அச்சப்படாமல் மற்றவர்களுக்கு தொற்று பரவாத வகையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆணையரின் வேண்டுகோளாகும். கோவையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: