கொல்லிமலையில் மழை மாசிலா அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

சேந்தமங்கலம்: தீபாவளி விடுமுறையில் கொல்லிமலைக்கு குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள், கனமழையால் தண்ணீர் கொட்டிய மாசிலா அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி  தாவரவியல் பூங்கா, காட்சி முனையம், வாசலூர்பட்டி படகு இல்லம், எட்டுகை அம்மன் கோயில், அரப்பளீஸ்வரர் கோயில், மாசி பெரியசாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 7 மாதங்களாக கொல்லிமலை செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததால், மாவட்ட நிர்வாகம் கொல்லிமலைக்கு இபாஸ் பெற்று செல்ல அனுமதியளித்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீபாவளி விடுமுறையையொட்டி, கடந்த 2 நாட்களாக வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர். தற்போது கொல்லிமலையில் கனமழை பெய்துள்ளதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா  பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: