கேரள அரசின் திட்ட அறிக்கை தயாராகிறது முல்லை பெரியாறில் புதிதாக அணை கட்ட தீவிரம்

திருவனந்தபுரம்: ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க கேரள அரசு  மீண்டும் தீர்மானித்துள்ளது. தமிழக - கேரள எல்லையில் அமைந்து உள்ளது முல்லை பெரியாறு அணை. இங்கு புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழக  அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி கடந்த 2011ல் கேரள அரசு திட்ட அறிக்கையை தயாரித்தது. அதன்படி செலவு ₹663  கோடி என்று மதிப்பிடப்பட்டது. 4 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்படும் எனவும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய அணை கட்ட இடமும்  தேர்வு செய்யப்பட்டது. அணை கட்டுவதற்கு முன்னோடியாக கடந்த 2014ல் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் 4  ஆண்டுகளுக்கு பிறகுதான் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தது.

இதற்கிடையே கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கேரள அரசு தனது முடிவை தற்காலிகமாக  நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதிய  அணைக்கான ஆய்வு பணிகளை தொடங்க கேரளா மீண்டும் தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க கேரள நீர்வளத்துறையின் கீழுள்ள நீர்ப்பாசனம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு வாரிய கூடுதல்  தலைமைச்செயலாளர் ஜோஸிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை அமைக்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்ட 1,000 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: