7 கோடி வருமானத்தை மறைத்த விவகாரம் கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: 7 கோடி வருமானத்தை கணக்கில் மறைத்தது தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததற்கு எதிராக கார்த்தி சிதம்பரம், அவரது  மனைவி நிதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது 2 வாரத்தில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி நிதி  ஆகியோர் சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்தை கடந்த 2015ம் ஆண்டு விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த  வருமானத்தை குறைத்து கணக்கு தாக்கல் செய்ததாக இருவர் மீதும் குற்றம்சாட்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கடந்த  2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் எம்பியான உடன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி  செய்தது. இந்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை  நிராகரித்த நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி நிதி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றும். இவர்கள் மீதான  வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அசோக் பூஷன்,சுபாஷ் ரெட்டி ஆகியோர் அமர்வில் இந்த  வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீடு மனுக்கள் மீது 2 வாரத்தில் பதிலளிக்க வருமான  வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதோடு, மனுவின் நகலை வழங்கவும் ஆணை பிறப்பித்தனர். வழக்கு இரண்டு வாரத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: