டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது: சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் அங்கு 3,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 95 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 7,606 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கொரோனாவின் 3-வது அலை உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கியுள்ளதாகவும், தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்துவது பயனற்றது என்றும் கூறியுள்ளார்.

பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது மட்டுமே தற்போதைய ஒரே தீர்வு என்று அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இதுவரை விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.45 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது மருத்துவமனைகளுக்கான கூடுதல் படுக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் 750 கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தி தரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: