சீனாவுக்கு சாதகமான உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் 15 ஆசிய-பசிபிக் நாடுகள் கையெழுத்து: உஷாராக ஒதுங்கியது இந்தியா

சிங்கப்பூர்: சீனாவுக்கு சாதகமானதாக கருதப்படும் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில், 15 ஆசிய-பசிபிக் நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இதில், இந்தியா இடம் பெறாமல் விலகி விட்டது. ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு’ (ஆர்சிஈபி) என்ற அமைப்பில், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 15 ஆசிய-பசிபிக் நாடுகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையால் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் இந்த நாடுகள் நேற்று கையெழுத்திட்டன.

இது பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ கூறுகையில், ‘‘கொரோனா கால ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சர்வதேச அளவிலான பொருளாதார முடக்கத்தை இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் இக்கூட்டமைப்பின் வர்த்தகம் இருக்கும். ஒப்பந்தத்தின் பிரதிபலன் இன்னும் 2 ஆண்டுகளில் தெரியும்,’’ என்றார்.

ஆசிய-பசிபிக் பிராந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடு இந்தியா. ஆனால், இந்த கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறியது. இதற்கான முக்கியக் காரணம் சீனாதான் என்று கருதப்படுகிறது. ‘ஆர்சிஈபி வர்த்தகக் கூட்டமைப்பை சீனா தனக்கு சாதகமாகக் கட்டுப்படுத்தக்கூடும்.

புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளை தனது ராணுவத் தளமாக கட்டமைப்பதற்காகவும் சீனா இதில் முயற்சி செய்யும். மேலும், கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார ரீதியாக சீனாவைச் சார்ந்துள்ளன. இது தவிர, ஏற்கனவே ஆசியான் வர்த்தகக் கூட்டமைப்பில் இந்தியா இருப்பதாலும், இதில் இணையவில்லை’ என்று கூறப்படுகிறது. எனினும், ‘இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்காக, இந்தியாவுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன,’ என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: