மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம்தேதி மண்டல பூஜை நடக்கிறது.கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறந்த போது, 5 நாட்கள் தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (15ம் தேதி) திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி  கண்டரர் ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்தார். தொடர்ந்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சூர் கொடுங்கல்லூர்  பூப்பத்தி வாரிக்கட்டு மடத்தில் வி.கே.ஜெயராஜ் ேபாற்றி சபரிமலைக்கும்,  அங்கமாலி வேங்கூர் ெரஜிகுமார் என்ற ஜனார்த்தனன் நம்பூதிரி  மாளிகைப்புறத்துக்கும் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி  நடந்தது. இன்று முதல் (16ம் தேதி) மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுவர். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும். ஏற்கனவே, நவம்பர் 1ம் தேதி தொடங்கிய ஆன்-லைன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்தது. 41 நாட்கள் தொடரும் மண்டல கால பூஜைகள், டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்படும். ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜனவரி 14ல் மகரவிளக்கு. பின்னர் மகரவிளக்கு தரிசனம் முடிவடைவதை குறிக்கும் வகையில் ஜனவரி 20ம் தேதி காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதற்கிடையே, தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

*  ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே, கோயிலில் தரிசனம்  செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

*  இவர்கள் தரிசனத்துக்கு செல்லும் போது 24 மணி  நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

*  பக்தர்களை பரிசோதிப்பதற்காக சபரிமலை செல்லும் வழியில் கொரோனா பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

*  பக்தர்கள்  தரிசனத்திற்கு காத்திருக்கும் போது 2 அடி இடைவெளி விட்டு, வரிசையில் நிற்க  வேண்டும்.

*  பம்பையில் குளிக்க அனுமதி இல்லை. பம்பை அருகே குளிப்பதற்காக  ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

*  நெய்யபிஷேகம் செய்யவும் கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது.

*  பக்தர்கள் பம்பையிலும், சன்னிதானத்திலும் தங்குவதற்கு  அனுமதி இல்லை.

82 ஆயிரம் பேர் முன்பதிவு

*  நவம்பர் 1ம் தேதி நடந்த ஆன்லைன் முன்பதிவு, 2 நாட்களில் முடிக்கப்பட்டது. இதில், மொத்தம்

*  82 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 26 ஆயிரம் பக்தர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

தரிசன நேரம் குறைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கமாக மண்டல காலத்தில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். உச்சிகால பூஜைக்கு பின்னர் மதியம் 1.30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.  அதாவது, மண்டல காலத்தில் எல்லா நாட்களிலும் சுமார் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக நடை நிறைந்திருக்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிகால பூஜைக்கு பின்னர் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை சாத்தப்படும். இதன்படி, தினமும் 13 மணி நேரம் மட்டுமே நடை திறந்திருக்கும்.

Related Stories: