பார்முலா 1ல் 7வது முறையாக ஹாமில்டன் உலக சாம்பியன்: ஷூமேக்கர் சாதனை சமன்

இஸ்தான்புல்: துருக்கி கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் தனது 7வது உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து), மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்தார்.இஸ்தான்புல் பந்தயக் களத்தில் நேற்று நடந்த பிரதான பந்தயத்தில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன் 1 மணி, 42 நிமிடம், 19.313 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார்.ரேசிங் பாயின்ட் வீரர் செர்ஜியோ பெரஸ் (+31.633 விநாடி) 2வது இடமும், பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (+31.960 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

தனது 94வது சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன், 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி ஷூமேக்கரின் (ஜெர்மனி) சாதனையை சமன் செய்தார்.

2020 சீசனில் இன்னும் 3 பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையிலேயே ஹாமில்டன் உலக சாம்பியனாவது உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. அவர் 307 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சக மெர்சிடிஸ் வீரர் போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரெட் புல் ரேசிங் அணியின் வெர்ஸ்டாப்பன் 170 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: