6ம் கட்ட ஆய்வு நிறைவு; கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு ஜனவரியில் துவக்கம்?

திருப்புவனம்: அகரத்தில் அகழாய்வு குழிகள் மூடப்பட்டதுடன், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு முழுமையாக நிறைவடைந்தது. 7ம் கட்ட அகழாய்வு பணியில் ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை ரூ.40 லட்சம் செலவில் கடந்த பிப்.19ம் தேதி துவங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் மண்டல உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டனர். கீழடியில் 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்பு கூடுகளும், அகரத்தில் 9 குழிகள் தோண்டப்பட்டு 1,020 பொருட்கள், மணலூரில் 9 குழிகள் தோண்டப்பட்டு 39 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

இதற்கிடையே கீழடியில் அகெய்ட் வகை காதணிகள், கார்னியர் வகை பாசிகள், கண்ணாடி காதணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இவை ஆவணப்படுத்தப்ப்டட பின்னர் கடந்த வாரம் கீழடியில் 20 குழிகள் மூடப்பட்டன. அகரம் அகழாய்வு தளத்தில் தோண்டப்பட்ட 9 குழிகளில் தங்க நாணயம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மழை காரணமாக ஆவணப்படுத்தும் பணி தாமதமாக நடந்து வந்தது. நேற்று முழுவதும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் குழிகள் மூடப்பட்டன. கீழடி 6ம் கட்ட அகழாய்வில் ஆவணப்படுத்தும் பணிகள் முழுமையடைந்ததை அடுத்து அனைத்து குழிகளும் மூடப்பட்டு விட்டன. 7ம் கட்ட அகழாய்வு பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என கூறப்படுகிறது.

Related Stories: