தீபாவளிக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு திக்கு முக்காடிய சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை: பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், தங்களது சொந்த ஊர்களில், பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் நேற்று பஸ், கார், இருசக்கர வாகனங்களில் பயணிக்க தொடங்கினர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோயில், பரனூர் சுங்கச்சாவடி வரை கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே, தீபாவளி சிறப்பு பஸ்களுக்காக, பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்திலும் காத்திருந்தனர். பரனூர் சுங்கச்சாவடியில், வாகனங்கள் அணிவகுத்து பல கிலோ மீட்டர் தூரம் நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், அரசு பஸ்களில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் பயணித்தனர். இதனால், கொரோனா தொற்று அதிகரித்து விடுமோ என அச்சம் பொதுமக்களிடையே நிலவியது.

Related Stories: