பழநி அருகே குதிரையாறு அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

பழநி : பழநி அருகே குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழநி பகுதியில் உள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக் கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயத்திற்கு இப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்பாசனம் அவசியமானதாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பழநி பகுதியில் விவசாய பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி பழநி பகுதியில் உள்ள பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய அணைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் பழநி அருகே குதிரையாறு அணையில் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு 41 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ரெட்டையம்பாடி, வேலைசமுத்திரம், ஆண்டிபட்டி, கொழுமம், சங்கரராமநல்லூர் பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 882 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: