அண்ணா பல்கலைக்கழக மாஜி துணைவேந்தர் பாலகுருசாமி மீது அமைச்சர் அன்பழகன் அவதூறு வழக்கு: தர்மபுரி கோர்ட்டில் தொடர்ந்தார்

தர்மபுரி: தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1க்குள் சென்றவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். பின்னர் அமைச்சர் அன்பழகன் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த மாதம் 25ம் தேதி அன்று வெளியான வார இதழ் ஒன்றில், தமிழக கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்துக்கு குறிப்பிட்ட தொகை கையூட்டு பெற்றுக் கொண்டு, பணி நியமனம் செய்வதாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி செய்தி வெளியாகியுள்ளது.

உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பரப்பி, அரசுக்கும், அமைச்சருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என உள்நோக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடத்தில் அந்த வார இதழ் சார்பில், எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. ஆகவே இந்த செய்தி தமிழக அரசு மற்றும் துறை‌ அமைச்சர் மீது அவதூறு பரப்புவதாக அமைந்துள்ளது. உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட அந்த வார இதழ் செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், பேட்டியளித்த பாலகுருசாமி மற்றும் செய்தியாளர் என நான்கு பேர் மீது, தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வாறு கே.பி.அன்பழகன் கூறினார்.

Related Stories: