நாகையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரயில் விட வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

நாகை: நாகையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் செல்ல ரயில்சேவை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை வட்டப் பேரவை கூட்டம் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. தலைவர் மேகநாதன்  தலைமை வகித்தார். துணைத்தலைவர் வாசு வரவேற்றார். மாவட்டத் தலைவர் இளவரசன் தொடங்கி வைத்தார்.செயலாளர் தமிழ்வாணன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.  தமிழக இளைஞர்களின் நலன் கருதி வேலைவாய்ப்பில் தமிழ் வழியாக கல்வி பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க உரிய  அரசாணை வெளியிட வேண்டும்.

டெல்டா மாவட்டமான நாகையில் விவசாயிகள் நலன் கருதி நெல் உலர்த்தும் ஆலை அமைக்க வேண்டும். கொரோனோ வைரஸ் தடுப்பு  பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அரசு அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாகையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் செல்ல ரயில்சேவை தொடங்க  வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் தங்களது மையங்கள் வாயிலாக உணவு  வழங்கியபோது ஏற்பட்ட கூடுதல் செலவீனத் தொகையை வழங்க வேண்டும். நாகை பஸ்ஸ்டாண்ட் பகுதியில் சரியான முறையில்  பராமரிக்கப்படும் இலவச கழிவறைகள் அதிகரிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பது  உட்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் அந்துவன்சேரல்,  முன்னாள் மாநிலச் செயலாளர் சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.துணைத்தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: