அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிதியமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: அனைத்து கணக்குகளையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆதாருடன் இணைக்கப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.  அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நல உதவிகளை பெறுவோர் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம். மற்றபடி, வங்கிக்கணக்கிற்கு வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்யவும் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதனால், வங்கிகள் வங்கி கணக்கு திறக்கும்போது வாடிக்கையாளரிடம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் கேட்கின்றன.

இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கத்தின் 73வது ஆண்டு பொது கூட்டத்தில் பேசிய மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘நிதிச்சேவையில் வங்கிகள் பங்கு முக்கியமானதாக உள்ளது. வங்கிகளில் பெரும்பாலான வாடிக்கையாளரின் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள், வங்கியில் உள்ள கணக்குகளில், பான் எண் இணைக்கப்பட வேண்டியவற்றில் பான் எண் இணைக்க வேண்டும். இதுபோல், ஆதார் எண்ணையும் வங்கிக் கணக்குடன் இணைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

டிஜிட்டல் அல்லாத பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊக்குவிக்கக் கூடாது. மாறாக, யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வங்கிகள் ஊக்கம் அளிக்க வேண்டும். இதுபோல், ரூபே கார்டுகள் வழங்குவதிலும் வங்கிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

Related Stories: