ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீனாவை மறைமுகமாக தாக்கிய பேசிய மோடி: மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்கும்படி அறிவுரை

புதுடெல்லி: ‘‘ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் இறையாண்மையை மதித்து நடந்து கொள்ள வேண்டும்,’’ என, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீனாவை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த இந்த மாநாட்டில், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தலைமையில் நடந்த இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பிரதமர் மோடி பேசியதாவது: நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளை மீறி, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு தேவையின்றி கொண்டு வருவதற்கு சில நாடுகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இது, துரதிருஷ்டவசமானது. இந்த அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கிறது. இந்த அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில், தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதில் இந்தியா தனது திறனை பயன்படுத்தும். முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை அனுப்பி உதவியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: