தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை? தினேஷ் குண்டுராவ் தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்ய தினேஷ் குண்டு ராவ் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் சென்னை வந்த நிலையில், நேற்று சத்தியமூர்த்திபவனில் மூத்த தலைவர்கள் அடங்கிய உயர் மட்ட குழுவுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக நீண்ட நேர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், செயல் தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், மயூரா ஜெயக்குமார், எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதி மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்வது, தற்போதைய காங்கிரஸ் தொகுதிகளை தவிர்த்து மாவட்ட வாரியாக காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளின் பட்டியலை தயாரிப்பது, அதன் அடிப்படையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பேச்சுவார்த்தையும் எழுந்துள்ளது. இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு மேலிட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், காலியாக இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு மட்டும் தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது. அதை திருநாவுக்கரசரும் ஆமோதித்து பேசியதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

அப்போது, ஈவிகேஎஸ்.இளங்கோவன் எழுந்து, ஒரு மாநில தலைவர் அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்றும், தேர்தல் முடிவுகள் தவறாக வந்தால் கட்சி மேலிடம் தலைவரை தான் கேட்பார்கள் என்று கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாக பதிலளித்து பேசியதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு குழு அமைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதித்துள்ளனர். இக்கூட்டம் முடிவடைந்த பின்பு, தமிழக மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சேவாதளம், மீனவர் பிரிவு, கலைப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டு ராவ் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories: