குளிர் காலத்தில் சுவாச தொற்று வேகமாக பரவக்கூடும்..மக்கள் பண்டிகை காலங்களில் கூடுதல் கவனம் தேவை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எச்சரிக்கை

டெல்லி: குளிர் காலத்தில் சுவாச தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருந்திட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பொது வெளியில் கூட்டமாக சேருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்திட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொரோனா தடுப்பு குறித்து 9 மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆந்திர பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்களும், செயலாளர்களும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தீபாவளி, சர்ப்பபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் அடுத்த ஆண்டில் வரவுள்ள மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் முழுவதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், குளிர் காலங்களில் சுவாச தொற்று வேகமாக பரவக்கூடும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: