கால தாமதமாக அப்பீல் மனுதாக்கல் கல்வி அதிகாரிகளுக்கு அபராதம்

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கல்வி மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் நியமனத்திற்கு கடந்த 2012ல் ஒப்புதல் வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்த வழக்கில், பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க 2016ல் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதை எதிர்த்து தாமதமாக தாக்கல் செய்யப்படும் மனுவை, விசாரணைக்கு ஏற்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘1,069 நாட்கள் தாமதமாக அப்பீல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என கேட்டால், உத்தரவு நகல் கிடைக்கவில்லை என்கின்றனர். கல்வித்துறையில் தான் அதிகளவு வழக்குகள் வருகின்றன. நீதிமன்ற உத்தரவு நகல்கள் அவ்வப்போது வெப்சைட்டில் பதிவேற்றப்படுகிறது. ஏன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறைக்கென தனி சட்ட ஆலோசகரை நியமிக்கக்கூடாது.

மிகவும் காலதாமதமாக மனு செய்ததால், குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிக்கு ரூ.15 ஆயிரம், குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. ஐகோர்ட் வெப்சைட்டில் பதிவேற்றப்படும் நீதிமன்ற உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது சரிபார்த்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

Related Stories: