ஊத்துக்கோட்டை பகுதியில் பள்ளிகளை திறக்க 90% பெற்றோர் சம்மதம்: கருத்துகேட்பு கூட்டத்தில் முடிவு

ஊத்துக்கோட்டை: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. வரும் 16ம் தேதியில் இருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்து 9ம் தேதி கருத்து கேட்கப்படும் என தெரிவித்தது. இதனால், ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.  

இதில், பள்ளியின் தலைமையாசிரியர்கள் மகேஸ்வரன், அனிதா ஆகியோர் தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஏழுமலை, செல்வராஜ், புலவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊத்துக்கோட்டை தாசில்தார் தேவி, ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், பெற்றோர்களிடம் பள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆம், இல்லை என்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதில், அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் 70 சதவீதம் பேர் பள்ளிகள் திறக்கலாம் என்றும், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் 85 முதல் 90 சதவீதம் பேர் பள்ளிகள் திறக்கலாம் என கூறியுள்ளனர். இதில், முன்னதாக கூட்டத்திற்கு வந்த பெற்றோர்களுக்கு சானிடைசர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

Related Stories: