நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உள்ளூர் பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வாரணாசி: ‘‘நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, உள்ளூர் பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடுங்கள்’’ என மோடி வலியுறுத்தி உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: இன்று எங்கு பார்த்தாலும் உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம் என்ற மந்திரமே ஒலிக்கின்றது. உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாடுவது பொருளாதாரத்துக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும். வாரணாசி மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்கமளிக்க வேண்டும்.

உள்ளூர் பொருட்களை மக்கள் பெருமையுடன் வாங்க வேண்டும், அந்த பொருட்களை பற்றி பேசவேண்டும், உள்ளூர் தயாரிப்புக்கள் சிறப்பானவை என்பதை மற்றவர்களுக்கு எடுத்துசெல்லுங்கள். தீபாவளிக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் உள்ளூர் பொருட்களாக இருக்க வேண்டும். இது அதை தயாரிப்பாளர்களை உற்சாகப்படுத்தும். வேளாண் துறையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலமாக விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவார்கள். அவர்கள் சந்தைகளுடன் நேரடியாக இணைகிறார்கள். இடைத்தரகர்கள் இதில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். உத்தரப்பிர தேசத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் விவசாயிகள் கூட இதனால் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதில்கலந்து கொண்டார். விழாவின் போது பிரதமர் மோடி உள்ளூர் மக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடினார்.

Related Stories: