கோயில்களில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மன்னார்குடி: அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் சொந்த ஊரான மன்னார்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு பெற்ற கமலா ஹாரிஸ் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம். இங்கு நேற்று கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து பெண்கள் வீட்டு வாசலில் கோலம் வரைந்துள்ளனர். அவரது குலதெய்வ கோயிலான துளசேந்திரபுரம் தர்ம சாஸ்தா கோயில் மற்றும் காளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.

துளசேந்திரபுரம் தர்ம சாஸ்தா கோயிலுக்கு  அமைச்சர் காமராஜ் வந்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார். திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கினர். அப்பகுதியினர் கூறுகையில், கமலா ஹாரிசின் வெற்றி மூலம் உலக அரசியலில் மன்னார்குடி தனி முத்திரை பதித்துள்ளது. அவர் சொந்த ஊருக்கு வர வேண்டும். அதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.அவர் வந்தால் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்போம் என்றனர்.

பைங்காநாடு முதல் அமெரிக்கா வரை

கமலா ஹாரிசின் தாய் வழி தாத்தா பி.வி.கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். கோபாலன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவில் சர்வீசில் பணியாற்றியவர். 1930ல் ஜாம்பியா நாட்டிற்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுக்க அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டவர். பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி விட்டார். இவருக்கு சியாமளா, சரளா என இரு மகள்கள்.

இதில் சியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த கருப்பினத்தவரான டொனால்டு ஹாரிசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கமலா, மாயா என இரண்டு மகள்கள். இதில் கமலா ஹாரிஸ் தான் தற்போது அமெரிக்க துணை அதிபராக தேர்வு பெற்றுள்ளார்.

Related Stories: