திருப்பதி விஷ்ணு நிவாசம் ஓய்வறையில் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரமும் இலவச டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச டிக்கெட் விஷ்ணு நிவாசம் ஓய்வறையில் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ரூ.300 சிறப்பு தரிசனத்தில் 16 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச தரிசன டிக்கெட் பெற அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பஸ்கள் மற்றும் ரயில்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக, திருப்பதி ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் 24 மணி நேரமும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தரிசனத்திற்கு 1 அல்லது 2 நாள் ஆகும் என்பதால் அதற்கேற்ப பக்தர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொண்டு  வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.1.48 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இலவச தரிசன டிக்கெட்டிலும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த ரூ.300 டிக்கெட்டிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை 30 ஆயிரத்து 705 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 10ஆயிரத்து 898பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று  எண்ணப்பட்டது. அதில் ரூ.1.48 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: