மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரிமலை கோயிலில் புஷ்பாபிஷேகம் ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல,  மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ம் தேதி  திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல், ஆன்ைலனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மண்டல கால தொடக்கத்தில்  ஒருநாளில் 1,000 பேரும், சனி,  ஞாயிறுகளில் 2,000 பேரும், அடுத்த கட்டத்தில்  தினமும் 5,000 பேரும் தரிசனம் செய்யலாம்.

சபரிமலை ஐயப்பன்  கோயில் புஷ்பாபிஷேகத்துக்கான மலர்கள், தமிழகம், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுவது வழக்கம். இவற்றின் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இந்தாண்டு மண்டல,  மகரவிளக்கு பூஜை காலத்தில்  புஷ்பாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அஷ்டாபிஷேகம்  நடத்தப்படும். பக்தர்கள்  இருமுடிகளில் கொண்டு வரும் நெய்த்தேங்காய்கள் சிறப்பு கவுன்டர்கள்  மூலம் சேகரிக்கப்படும்.

அதற்குப் பதிலாக ஏற்கனவே அபிஷேகம் செய்து   தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நெய் பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும், பக்தர்கள் வடசேரிக்கர - பம்பை மற்றும் எருமேலி - பம்பை ஆகிய 2  முக்கிய பாதைகள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கடைகளை ஏலம் எடுக்க ஆளில்லை: பொதுவாக மண்டல,  மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள்  வருகை தருவர். ஆனால், இந்த ஆண்டு 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி போன்ற  இடங்களில் வாகன பார்க்கிங், தற்காலிக கடைகள், கழிப்பறை, ஸ்டுடியோ, தேங்காய்  விற்பனை போன்றவற்றிற்கான ஏலம் எடுக்க ஆட்கள் இல்லை. 2 முறை இ-டெண்்டர்   விட்டும் பலன் இல்லை. இதனால், இனி பொது ஏலம் விடப்படும் என தெரிகிறது.

Related Stories: