உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் கூறிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக : தலைமை நீதிபதிக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

ஹைதாபாத் : உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் கூறி கடிதம் எழுதிய விவகாரத்தில் ஆதாரம் இல்லை எனில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில், கூறப்பட்ட புகார்கள் நீதித்துறை மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளனர். இதே போன்று ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் சுனில் குமார், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜெகன் மோகன் ரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய மூத்த வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜெகன் மோகன் ரெட்டியை பதவி நீக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 16ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது. இப்பிரச்னையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணு கோபால் ஏற்கனவே அனுமதி மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார்கள் கூறி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எழுதிய கடிதம் நீதிமன்ற வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: