‘கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் மகன்’ பினீஷ் குடும்பத்தினருக்கு வீட்டு சிறை: அமலாக்கத்துறை நடவடிக்கை

திருவனந்தபுரம்: பெங்களூர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீசை ெபங்களூரு மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மத்திய அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் பினீசுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் இருப்பதும், பலருடன் சேர்ந்த ஓட்டல், கார் உதிரிபாகம் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பினீஷ் வசித்து வந்த வீடு மற்றும் அவர் பங்குதாரராக உள்ள 5 நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பினீசின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், அமலாக்கத்துறையினர் பினீஸ் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தனது குழந்தை, தாயுடன் வந்து வீட்டின் சாவியை அதிகாரிகளிடம் கொடுத்தார். பின்னர் அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9 மணி வரை சுமார் 11 மணி நேரம் நீடித்தது. பரிசோதனை முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு பினீசின் மனைவியிடம் அதிகாரிகள் கூறினர். அவர் மறுத்துவிட்டார். கையெழுத்திடவில்லை என்றால் நாங்கள் வெளியே செல்லமாட்டோம் என அதிகாரிகள் அங்கேயே இருந்தனர்.

அதுபோல் பினீசின் மனைவி, குழந்தை மற்றும் அவரது தாயையும் அவர்கள் வெளியே விடவில்லை. இது குறித்து பினீசின் வக்கீல் கூறுகையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பினீசின் குடும்பத்தினரை மிரட்டி கையெழுத்து வாங்க முயற்சிக்கின்றனர். இது தவிர குடும்பத்தினரை பலமணி நேரம் வீட்டில் சிறை வைத்துள்ளனர் என்றார். இந்நிலையில் இன்று காலை, பினீசின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பினீசின் மனைவியை சந்திக்க வேண்டும் என கூறினர். ஆனால் பாதுகாப்பில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து பெண்கள் உள்பட உறவினர்கள் வீட்டின் கேட் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக பினீசின் உறவினர்கள் பூஜப்புரா போலீசில் புகார் செய்தனர். மேலும் மனித உரிமை ஆணையத்திலும், குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில், 24 மணிநேரத்துக்கும் மேலாக 2 பெண்கள், ஒரு குழந்தையையும் சிறை வைத்துள்ளனர். அவர்களை மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக தீர்மானித்துள்ளோம் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: