ராஜஸ்தானில் நடந்த 6 மாநகராட்சி தேர்தலில் தலா 2 மேயர் பதவியை கைப்பற்றிய பாஜ, காங்.: மீதியுள்ள 2 இடங்களில் சுயேட்சைகள் பேரம்?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த 6 மாநகராட்சி தேர்தலில் தலா 2 மேயர் பதவியை பாஜ - காங். கட்சிகள் கைப்பற்றின. மீதியுள்ள 2 இடங்களில் சுயேட்சைகளின் ஆதரவை பொறுத்தே எந்த கட்சி கவுன்சிலர் மேயராவார் என்பது தெரியவரும். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெய்ப்பூர் ஹெரிடேஜ், ஜெய்ப்பூர் கிரேட்டர், ஜோத்பூர் வடக்கு, ஜோத்பூர் தெற்கு, கோட்டா வடக்கு மற்றும் கோட்டா தெற்கு ஆகிய ஆறு மாநகராட்சிகளில் உள்ள 560 வார்டுகளுக்கு கடந்த அக். 29 மற்றும் நவ. 1ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 2,238 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதல் கட்டமாக, ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் (100 வார்டுகள்), ஜோத்பூர் வடக்கு (80 வார்டுகள்), கோட்டா நோர்த் (70 வார்டுகள்) ஆகியவற்றுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜெய்ப்பூர் கிரேட்டர் (150 வார்டுகள்), ஜோத்பூர் தெற்கு (80 வார்டுகள்), கோட்டா (80 வார்டுகள்) ஆகிய மாநகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், பாஜகவின் கையில் இருந்த ஜோத்பூர் வடக்கு மற்றும் கோட்டா வடக்கு ஆகிய மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது. அதேநேரத்தில் ஜெய்ப்பூர் கிரேட்டர் மற்றும் ஜோத்பூர்-தெற்கில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது.

கோட்டா தெற்கு மற்றும் ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் ஆகிய மாநகராட்சிகளில் சுயேட்சைகளின் ஆதரவை பொறுத்தே எந்த கட்சி மேயர் பதவியை கைப்பற்றும் என்பது தெரியவரும். கோட்டா தெற்கு மாநகராட்சியின் 80 இடங்களில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு  36-36 இடங்களும், சுயேட்சைகள் எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.  இதேபோல், ஜெய்ப்பூர் ஹெரிடேஜில் மாநகராட்சியின் மொத்த 100 இடங்களில்,  காங்கிரசின் 47 கவுன்சிலர்கள் மற்றும் பாஜகவின் 42 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள 11 வார்டுகளில் சுயேட்சைகள் வென்றுள்ளனர். அதனால், இந்த இரு மாநகராட்சிகளின் மேயர் யார் என்பதை சுயேட்சைகள் தான் முடிவு செய்ய உள்ளனர்.

அதனால், சுயேட்சைகளை ‘பேரம்’ களைக் கட்ட தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், மேயருக்கான தேர்தல் வேட்பு மனுக்களை நாளைக்குள் (நவ. 4) சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தேர்தல் முடிவு குறித்து முதல்வர் கெலாட் கூறுகையில், ‘ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும்  கோட்டா மாநகராட்சி தேர்தல்களின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மூன்று  மாநகராட்சியில் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், காங்கிரஸ் கட்சிக்கு  40.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன; இது பாஜகவைவிட கிட்டத்தட்ட 2.5  சதவீதம் அதிகம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: