கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தமிழக போலீசாரால் தேடப்படும் குற்றவாளி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்கு அடிக்கடி அதிரடிப்படை வீரர்களுக்கும், மாேவாயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பது வழக்கம். இந்நிலையில் மீன்முட்டி, பந்நிப்புயில், வாளாம்குன்று போன்ற இடங்களில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வந்ததையடுத்து நேற்று அதிகாலை வயநாடு படிஞாறேத்தர போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ‘தண்டர் போல்ட்’ அதிரடிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த, தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளத்ைத சேர்ந்த வேல்முருகன்(32) சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து மாவோயிட்டுகள் பயன்படுத்திய 303 ரக துப்பாக்கி, துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே வேல்முருகன் கடந்த 2016 முதல் தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. 2016 ஜனவரி 6ம் தேதி தமிழக உள்துறை செயலாளர் சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதில் வேல்முருகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ2 லட்சம் இனாம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: