தோவாளையில் டூ வீலரில் செல்வோர் பாதிப்பு; சாலையில் சிதறிய ஜல்லிகளை அப்புறப்படுத்திய போலீசார்: அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் விபரீதம்

ஆரல்வாய்மொழி: தோவாளையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளில் இருந்து சிதறிய ஜல்லிகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலையில் கிடந்த ஜல்லிகளை அப்புறப்படுத்தினர்.

திருநெல்வேலியில் இருந்து கல், ஜல்லி லோடுடன் தினமும் 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் குமரிக்கு வருகின்றன. இவை காவல்கிணறு பகுதியில் இருந்து புதிய நாற்கர சாலையில் தேவசகாயம் மவுண்டு வழியாக தோவாளை வருகின்றன. ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை தவிர்ப்பதற்காக இந்த சாலையில் வருகின்றனர். இந்த சாலையில் வாகன சோதனை எதுவும் நடப்பதில்லை.

இதனால் லாரிகள் அளவுக்கு அதிகமாக ஜல்லி, கல் ஏற்றி வருகின்றன. லாரியின் பாடி மட்டத்தை விட அதிகமாக இருப்பதால் ஜல்லி, கற்கள் சாலையில் விழுகின்றன. இதனால் சாலையோரம் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது ஜல்லிகள் விழுவதால் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த நிலையில் தோவாளை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியில் இருந்து ஜல்லிகள் சாலையில் சிதறின. சாலையில் குவியல் குவியலாக ஜல்லிகள் கிடந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையில் சிதறி கிடந்த ஜல்லி கற்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர்.

இதேபோல் ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் செண்பகராமன்புதூர், சீதப்பால், துவரங்காடு, அழகியபாண்டியபுரம் போன்ற பகுதிகளிலும் சாலைகளில் ஆபத்தான முறையில் ஜல்லிகள் சிதறி கிடக்கின்றன. எனவே குமரி மாவட்டத்திற்குள் வருகின்ற வாகனங்களை கடும் சோதனைக்கு பின்னரே அனுதிக்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: