பராமரிப்பின்றி சிதிலமடைந்த குளத்தூர் தெற்கு கன்மாய் மடை: விரைவில் சீரமைக்கப்படுமா?

குளத்தூர்: பராமரிப்பின்றி சிதிலமடைந்த குளத்தூர் தெற்கு கண்மாய் மடை விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குளத்தூர் தெற்கு கண்மாய் வாயிலாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பயன்பெறுகின்றன. இருப்பினும் முறையான பராமரிப்பின்றி இக்கண்மாய் நாளுக்கு நாள் பாழாகி வந்தது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள இக்கண்மாயின் 1வது மடைக்குழி கடந்த சில ஆண்டுகளாக முற்றிலுமாக பராமரிப்பின்றி உருக்குலைந்ததோடு சீமை கருவேல மரங்கள் இதை ஆக்கிரமித்துள்ளன.

உடனடியாக இதை சீரமைக்காவிட்டால் கண்மாயில் தேங்கும் தண்ணீரானது சிதிலமடைந்த மடைக்குழியின் வழியாக வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுவதோடு விளைந்த பயிர்களை சேதமாக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயி அருஞ்சுனைகனி கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்மாயில் தேங்கும் தண்ணீர் முதலாவது மற்றும் 2வது மடைக்குழிவழியாக திறந்துவிடப்பட்ட போது நெல், பருத்தி என இரு போகம் அளவுக்கு விவசாயம் நடந்தது.

பின்னர் மழையளவு குறைந்ததோடு கண்மாய் மற்றும் மடைகளும் முறையாகப் பராமரிக்கப்படாததால் இதில் தேங்கும் மழை நீர் மடை ஓட்டை வழியாக கசிந்து வீணாக விளைந்த நிலங்களுக்குள் பாய்ந்து பெரும் சேதத்தை உருவாக்குகிறது. தற்போது மடைக்குழியை சீமைகருவேலமரங்கள் மண்டியிட்டு ஆக்கிரமித்துள்ளதால் மேலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, உடனடியாக சீரமைக்காவிட்டால் இனிவரும் நாட்களில் கண்மாயில் பெரும் தண்ணீர், மடை வழியாக வீணாகச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித பலனுமில்லை. எனவே, உடனடியாக மடையை சீரமைக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றார்.

Related Stories: