கமல்நாத் விவகாரத்தில் அதிரடி: நட்சத்திர அந்தஸ்தை ரத்து செய்ய யார் அதிகாரம் கொடுத்தது?

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத், தாப்ரா தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் இமர்தி தேவியை ‘அயிட்டம்’ என குறிப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கமல்நாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 இந்த மனு தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். அப்போது தலைமை நீதிபதி பாப்டே, ‘‘நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நீங்கள் என்ன அந்த கட்சியின் தலைவரா? ஒருவரின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை நீக்குவதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது குறித்து தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என கடும் கண்டனத்துடன் உத்தரவிட்டார்.

Related Stories: