திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதி விவசாயிகளுடன் கனிமொழி எம்.பி. நாளை கலந்துரையாடல்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி: திருச்செந்தூர்,  ஸ்ரீவைகுண்டம் தொகுதி விவசாயிகளுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்று கலந்துரையாடும் கூட்டம் நாளை (2ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து தெற்கு  மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு உட்பட்ட பெரும் பகுதி விவசாயம் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால்  பாசன கால்வாய்களையும், மருதூர் மேலக்கால், கீழக்கால் பாசன கால்வாய்களையும்  சார்ந்துள்ளது. இதேபோல் ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள விளை நிலங்களும் இந்த கால்வாய்களை சார்ந்துள்ளன.

மாவட்டத்தின் முதன்மை விவசாயமான நெல், வாழை சாகுபடி, தென்னை, வெற்றிலை சாகுபடி போன்ற விவசாயம் செழிப்புடன் நடைபெற்றால் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் செழிப்படையும். இந்த விவசாயத்திற்கு அடிப்படையான வடகால்,தென்கால், மருதூர் மேலக்கால், கீழக்கால் ஆகிய கால்வாய் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி கலந்துரையாடல் மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று, கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு, முதல் கட்டமாக நாளை (2ம் தேதி) ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம்  கனிமொழி எம்.பி. தலைமையில் நடக்கிறது.

நாளை காலை 9மணிக்கு கடம்பாகுளம் விவசாயிகளுக்கு கல்லாம்பாறை பூலுடையார் சாஸ்தா கோவில் பகுதியிலும், பகல் 11மணிக்கு கடம்பா கீழ்பகுதி குளங்களின் விவசாயிகளுக்கு குரும்பூர் ஞானம் மஹாலிலும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு வடகால் குளங்களின் விவசாயிகளுக்கு ஏரல் ஜெ.ஜெ.திருமண மண்டபத்திலும்  நடக்கிறது. இந்த கூட்டத்தில், விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டுகிறேன். மருதூர் மேலக்கால், கீழக்கால், சடையனேரி  உபரி நீர் பாசன கால்வாய் விவசாயிகளின் கூட்டம் பின்னர் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: