ராயல் சேலஞ்சர்ஸ் திணறல்

ஷார்ஜா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 121 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஷிவம் துபே, ஸ்டெயினுக்கு பதிலாக சைனி, உடனா இடம் பெற்றனர். பிலிப், படிக்கல் இருவரும் பெங்களூர் இன்னிங்சை தொடங்கினர். சந்தீப் வேகத்தில் படிக்கல் 5 ரன், கேப்டன் கோஹ்லி 7 ரன் எடுத்து வெளியேற, ஆர்சிபி 28 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

பிலிப் - டி வில்லியர்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. டி வில்லியர்ஸ் 24, பிலிப் 32 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பெங்களூர் ஸ்கோர் வேகம் தடைப்பட்டது. ரஷித், நடராஜன் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். ஓரளவு தாக்குப்பிடித்த சுந்தர் 21 ரன் எடுத்து நடராஜன் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மோரிஸ் (3), உடனா (0) இருவரும் ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன் மட்டுமே சேர்த்தது. குர்கீரத் 15, சிராஜ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சந்தீப், ஹோல்டர் தலா 2, நடராஜன் (4-0-11-1), நதீம், ரஷித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து 20 ஓவரில் 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

Related Stories: