டி20 கிரிக்கெட்டின் சகாப்தம்...!! 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார் 'யுனிவர்சல் பாஸ்'கிறிஸ் கெய்ல்

அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் 8 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசன் 50ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், ‘யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். மொத்தம் 63 பந்துகளை எதிர்கொண்ட அவர், எட்டு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசி 99 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இப்போட்டியைச் சேர்ந்து மொத்தம் 409 டி20 போட்டிகளில் பங்கேற்ற கிறிஸ் கெயில் 1000 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கும் கெய்ரன் பொல்லார்ட் 524 போட்டிகளில் 690 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். பிரன்டன் மெக்கலம் 370 போட்டிகளில் 485 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரேயொரு இந்தியரான ரோஹித் ஷர்மா 376 போட்டிகளில் 337 சிக்ஸர்கள் அடித்துள்ளார். நேற்றைய போட்டி மூலம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்ல் அதிரடியாகக் குவித்த 99 ரன்கள் உதவியுடன் 185 ரன்கள் சேர்த்தது. கடின இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி, பென் ஸ்டோக்ஸ் அரை சதத்தால் கரை சேர்ந்தது.

Related Stories: