7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் எதிரொலி: தமிழக கவர்னர் பன்வாரிலாலை முதல்வர் நேரில் சந்தித்து நன்றி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி நேற்று மாலை நேரில் சந்தித்து நன்றி கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5.40 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சிலிங்கில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீட்டித்தது.  இந்த சந்திப்பின்போது தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டே மருத்துவக்கல்லூரிகளில் சேருவார்கள்

கவர்னரை சந்தித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கையை சுகாதார துறை எடுத்து வருகிறது. விரைவில் மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவ - மாணவிகள் இந்த ஆண்டே மருத்துவ படிப்பில் சேருவார்கள்’’ என்றார்.

Related Stories: